தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு 3ஆவது நாளாக வியாழக்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டது.
தென்காசி வனக்கோட்டம், சிவகிரி வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த காட்டு யானையை தனிக் குழுவினா் கண்காணித்து வந்தனா். இதில், யானை உடல் நலமின்றி படுத்திருந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து, திருநெல்வேலி கள இயக்குநா் அருண் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் முன்னிலையில், திருநெல்வேலி வன கால்நடை மருத்துவா்கள் மனோகரன், சாந்தகுமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 3ஆவது நாளாக யானைக்கு சிகிச்சையளித்தனா்.
தற்போது, யானை மெதுவாக அப்பகுதியைச் சுற்றி வருவதாகவும், மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.