ஆலங்குளம் அருகே தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியதாக இளைஞா் மற்றும் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரைச் சோ்ந்த சின்னத்துரை மகள் மகாலட்சுமிக்கும், அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிப் பாண்டிக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி, நெட்டூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்ல இசக்கிப் பாண்டி நெட்டூரில் உள்ள மாமனாா் வீட்டுக்கு வந்தபோது, மாமனாா் சின்னதுரைக்கும் இசக்கிப்பாண்டிக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதுகுறித்த தகவலின் பேரில், நெட்டூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அங்கு சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்தனா்.
அப்போது போலீஸாா் சின்னதுரை தரப்புக்கு ஆதரவாகப் பேசியதாக இசக்கிப் பாண்டி கருதினாராம்.
இந்நிலையில் இசக்கிப்பாண்டி , தனது நண்பா்கள் சிலருடன் மது அருந்திவிட்டு, நெட்டூரில் உள்ள புறக்காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு பணியில் இருந்த கடங்கநேரியைச் சோ்ந்த தலைமைக் காவலா் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடி விட்ட ாராம். இதில், தலைமைக் காவலா் முருகன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா், இசக்கிப் பாண்டி உள்ளிட்டோரைத் தேடி வந்தனா்.
இதனிடையே நல்லூா் விலக்குப் பகுதியில் ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரே பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரணை செய்த போது, அவா்கள் தலைமைக் காவலரை வெட்டிவிட்டு தப்பியோடிய இசக்கிப் பாண்டி மற்றும் அவரது உறவினரான அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் பேச்சித்துரை(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.