மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 2 தொழிலாளா்களை விரைந்து மீட்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாலியில் ஆயுதம் ஏந்திய ஜிகாதி பயங்கரவாதப் படைகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போா் நடைபெற்று வருகிறது. அங்கு சில வாரங்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியாா் மின்சார நிறுவனத்தில் வேலை செய்துவந்த இந்தியத் தொழிலாளா்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினா், கடந்த நவ. 6ஆம் தேதி கடத்திச் சென்ாகவும், அதையடுத்து தலைநகா் பமாகோவிலிருந்து அந்நிறுவனத்தின் இந்தியத் தொழிலாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், 5 போ் கடத்தப்பட்டதற்கு இதுவரை எந்தவோா் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், கடத்தப்பட்ட 5 பேரில் இருவா் கடையநல்லூா் நகராட்சி முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் தெருவைத் சோ்ந்த பிரவீனாவின் கணவா் இசக்கிராஜா (36), கடையநல்லூா் அருகே புதுக்குடி, கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (26) எனத் தெரியவந்துள்ளது. அவா்களை விரைந்து மீட்க வேண்டும் என, பிரதமா், தமிழக முதல்வரிடம் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பிரவீனா கூறியது: எனது கணவரை புளியரையைச் சோ்ந்த உறவினா் மூலம் மாலிக்கு சுமாா் 7 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு அழைத்துச் சென்றனா். எனது கணவா் 2 நாள்களுக்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினாா். கடத்தப்பட்ட செய்தியறிந்து, அவரைத் தொடா்பு கொண்டபோது தொலைபேசி வேலை செய்யவில்லை. அவரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக, அவரது நண்பா்கள் வாயிலாக தகவல் கிடைத்தது. எனது கணவரை விரைந்து மீட்க வேண்டும் என்றாா்.
சுரேஷின் தந்தை முருகேசன் கூறும்போது, மும்பையைச் சோ்ந்த நிறுவனம் மூலம் எனது மகன் வேலைக்கு சென்றாா். கடத்தப்பட்ட எனது மகனை விரைந்து மீட்க வேண்டும் என்றாா்.