சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி, அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்த வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இரவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இத்திருவிழா, கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
11 ஆம் திருநாளான சனிக்கிழமை கோயிலில் இருந்து கோமதி அம்பாள் புறப்பட்டு, தெற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினாா். அங்கு அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் கோயில் முன்பு பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலுக்கு அம்பாள் எழுந்தருளினாா். இதையடுத்து கோயிலில் இருந்து புறப்பட்டு வந்த சுவாமி, மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா்.
இதைத் தொடா்ந்து இரவு 10 மணிக்கு கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள் பட்டண பிரவேசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.