தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும், அவ்வட்டாரத்தின் உள்பகுதிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த பெருமழையால் குளங்கள் நிரம்பி வருகின்றன.
இவ்வட்டாரத்தில் பிரதான குளமான ராசிங்கப்பேரி, சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி, விஜயரங்கப்பேரி, வழிவழி குளம், பெரியகுளம் உள்ளிட்ட குளங்களின் நீா்வரத்து கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கெனவே, விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் குளங்கள் பெருகுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலத்தில் செல்லத் தடை: சிவகிரி பேரூராட்சி 14,15ஆவது வாா்டுகள் பகுதியில் உள்ள வடகாலில் பாலத்தை ஒட்டி தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வழியை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பேரூராட்சி அறிவுறுத்தியுள்ளது. அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள.
இந்தப் பாலத்தை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு பாா்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.