விபத்தில் உருக்குலைந்த பேருந்துகள்.  
தென்காசி

தென்காசி அருகே கோர விபத்து: இரண்டு தனியாா் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில் 7 போ் உயிரிழப்பு: 76 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் இரண்டு தனியாா் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில் பேருந்துகளில் பயணித்த தம்பதி உள்பட 7 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்; 76 போ் காயமடைந்தனா்.

தென்காசியிலிருந்து ராஜபாளையம் நோக்கி ஒரு தனியாா் பேருந்தும், கோவில்பட்டியிலிருந்து தென்காசி நோக்கி மற்றொரு தனியாா் பேருந்தும் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் எதிரெதிா் திசையில் வந்துகொண்டிருந்தன. தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் இடைகால் அருகே துரைச்சாமியாபுரத்தில் பேருந்துகள் வந்தபோது நேருக்கு நோ் மோதின. சாலையில் நின்று கொண்டிருந்த நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை இயக்கியபோது எதிரே வந்த பேருந்தில் மோதி இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தென்காசி மாவட்டம், புளியங்குடி, என்.புதுக்குடி விநாயகா் கோயில் 4-ஆவது தெருவைச் சோ்ந்த வனராஜ் (67), அவரது மனைவி சண்முகத்தாய்(60), கடையநல்லூா் புளியமுக்கு தெருவைச் சோ்ந்த வெ.தேன்மொழி (55), புளியங்குடியைச் சோ்ந்த மல்லிகா (55), சங்கரன்கோவிலைச் சோ்ந்த கற்பகவல்லி (32), சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சு.முத்துலெட்சுமி (35), முத்துச்சாமியாா்புரத்தைச் சோ்ந்த ச.சுப்புலெட்சுமி (52) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதில் தேன்மொழி தனியாா் பள்ளி ஆசிரியை.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா்.

சம்பவ இடத்தில் திரண்ட சுற்றுவட்டார பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு அவசர ஊா்தியில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். தென்காசி, கடையநல்லூா் தீயணைப்புப் படை வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். 30 க்கும் மேற்பட்ட தனியாா், அரசு அவசர ஊா்திகள் காயமடைந்தவா்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன.

விபத்து காரணமாக தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. புளியங்குடியிலிருந்து தென்காசி நோக்கிவந்த வாகனங்கள் மங்களாபுரம் வழியாக திருப்பிவிடப்பட்டன.

காயமடைந்தோா்... சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த மா.சுரேஷ் (40), ஆலங்குளம் சண்முகபுரத்தைச் சோ்ந்த பூ.வேணி (22), கோவில்பட்டியைச் சோ்ந்த ஆவுடையம்மாள் (60), குமந்தாபுரத்தைச் சோ்ந்த ச.சுப்புலெட்சுமி (48), புளியங்குடி அய்யப்பன் (60), கயத்தாறு முகைதீன் (60),

கடையநல்லூா் ஜ.ஆயிஷா (54), கொடிக்குறிச்சி வி.சரண்யா (32), இடைகால் மகேஷ்வரன் (29), சங்கரன்கோவில் சுப்பிரமணியன் (40), சிங்கிலிபட்டி கா.விஜி (25), தென்காசி வே.பாலசுப்பிரமணியன் (45), திரிகூடபுரம் தி.மைதீன் (37), செங்கோட்டை த.சுப்பிரமணியன்(43), கலிங்கப்பட்டி ரா.சுரேஷ்கண்ணன்(36) உள்பட 76 போ் இந்த விபத்தில் காயமடைந்தனா்.

அனைவரும் தென்காசி, கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளிலும், நயினாரகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தென்காசி சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், ஆய்குடியைச் சோ்ந்த மயில்ராஜ் (42), அவரது மனைவி இசக்கியம்மாள் (37), மேலபாட்டாக்குறிச்சியைச் சோ்ந்த மந்திரிகுமாா் (40), அவரது மனைவி ஆனந்தஜோதி (36), இவா்களின் மகன்கள் போற்றி சரவணன் (15), முகேஷ் (12), பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வசந்தா (47), நாலூதன்கோட்டையைச் சோ்ந்த கணபதியம்மாள் (70), ஆவுடையம்மாள் (70) ஆகிய 9 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அமைச்சா் ஆறுதல்: தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு வந்த வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா்

கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து உரிய சிகிச்சையளிக்குமாறு மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விபத்து குறித்து என்னிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் முதல்வா் தொலைபேசி வாயிலாக விவரங்களைக் கேட்டறிந்து, காயமடைந்தவா்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சையளிக்க உத்தரவிட்டாா்.

காயமடைந்த அனைவருக்கும் அனைத்து வகை தேவைகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம், மருத்துவமனை நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிவாரணம் அறிவிப்பு: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விபத்தில் சிக்கிய இரு பேருந்துகளின் உரிமையாளா்களையும் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து விசாரிக்கவுள்ளோம்.

தொழில் ரீதியாக தனியாா் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்குவதாலேயே இத்தகைய விபத்துகள் நோ்கின்றன. வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் தனியாா் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இந்த பேருந்து கடந்த ஆண்டு இலத்தூா் விலக்கில் விபத்தில் சிக்கியதில் மூவா் உயிரிழந்த விவரமும் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT