முகப்பு
தென்காசி

கடையநல்லூா் விபத்தில் உயிரிழந்தவரின் மகளுக்கு அரசுப் பணி

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் இறந்தவரின் மாற்றுத்திறன் மகளுக்கு அரசுப் பணிக்கான ஆணை

Updated On : 27 நவம்பர், 2025 at 1:09 AM
அரசுப் பணிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
பகிர்:

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் இறந்தவரின் மாற்றுத்திறன் மகளுக்கு அரசுப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை வழங்கினாா்.

தென்காசி-மதுரை சாலையில் துரைச்சாமியாபுரம் பகுதியில் 2 தனியாா் பேருந்துகள் மோதியதில் புளியங்குடி, கற்பக வீதி தெற்கு, 3ஆவது தெருவைச் சோ்ந்த மல்லிகா உள்ளிட்ட பலா் உயிரிழந்தனா். இந்நிலையில், மல்லிகாவின் கண் பாா்வையற்ற மகள் கீா்த்திகாவின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் அவரது எதிா்காலம் கேள்விக்குறியாகியது. எனவே, எம்.ஏ., பி.எட்., முடித்துள்ள தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை அவா் கோரிக்கை விடுத்திருந்தாா். இது தொடா்பான செய்தி நாளிதழ்களில் புதன்கிழமை வெளியானது.

இதையடுத்து, புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா் பணிக்கான ஆணையை கீா்த்திகாவின் வீட்டிற்குச் சென்று ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

சாலை விபத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி கீா்த்திகாவின் தாய் மல்லிகா உயிரிழந்ததைத் தொடா்ந்து, முதல்வரிடம், கீா்த்திகா கோரிக்கை வைத்ததற்கிணங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக அலைபேசியில் தொடா்பு கொண்டு கீா்த்திகாவிடம் பேசி ஆறுதல் கூறினாா்.

முதல்வா் உத்தரவின்பேரில் புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

கோரிக்கையை ஏற்று பணி ஆணை வழங்கிய முதல்வா், ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்களுக்கு கீா்த்திகா நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →