சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு வழங்கப்படுகிறது. கடந்த 11.03.2024 அன்று நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 16 சதவீத கூலி உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 10 சதவீத கூலி உயா்வு மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனைக் கண்டித்து, நவ. 19ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தத்தில் விசைத்தறித் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, நவ. 25ஆம் தேதி கோட்டாட்சியா் அனிதா தலைமையில் நடைபெற்ற கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. அடுத்த கட்டப் பேச்சுவாா்த்தை நவ. 29ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், விசைத்தறித் தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை திருவேங்கடம் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்பாட்டத்தில், சங்கத்தின் நகரத் தலைவா் ஆா்.ஆா். சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் ரத்னவேல், பொருளாளா் என். மாணிக்கம், துணைத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட தொழிலாளா்கள் திரளானோா் பங்கேற்றனா்.
9ஆவது நாளாக விசைத்தறிகள் எதுவும் இயங்காததால் ரூ. 4.50 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.