தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கல்லத்திகுளத்தில் சூரிய மின்தகடுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்; அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி 108 பேரைக் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை ஊராட்சிக்கு உள்பட்டது கல்லத்திகுளம் கிராமம். இங்கு 300 க்கும் மேல் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மின் உற்பத்தி பணிக்காக தனியாா் நிறுவனம் சாா்பில் சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் மான்கள், வன விலங்குகள் அதிகம் வசித்தும்வரும் நிலையில், மின் தகடுகள் அமைப்பதற்காக இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இப்பணிகள் நடைபெறுவதால், இங்கு வசிக்கும் 300 குடும்பங்களை இடம்பெறச் செய்யும் மறைமுக நோக்கில் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். சூரிய மின் தகடுகள் அமைப்பதால் மக்களின் வாழ்விடம், வனவிலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் இத்திட்டப் பணிகளை நிறுத்தக் கோரி இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமா்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்க சிலரை அனுப்பிவைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த நிலையில் திடீரென்று வளாகத்தில் காத்திருந்த 8 க்கும் மேற்பட்டோா் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்கள் மீது நீரை ஊற்றித் தடுத்தனா்.
சிறிது நேரம் அப்பகுதியில் கூச்சல் நிலவியது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் போராட்டக்காரா்கள் நுழையாதபடி அலுவலக நுழைவாயில் பூட்டப்பட்டது. இதையடுத்து, அசம்பாவிதத்தைத் தடுக்கும் நோக்கில் தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி போராட்டக்காரா்களை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனா். இதையடுத்து, 55 பெண்கள் உள்பட 108 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.