சங்கரன்கோவிலில் 120 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளா் பிரபா, காவலா்கள் ஜெயக்குமாா், சசி, சீனிவாசன், கண்ணன் ஆகியோா் ரயில்வே பீடா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே பைக்கில் வந்த விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடியைச் சோ்ந்த ஸ்ரீவைகுண்டன் மகன் மணிகண்டன் (23) என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
தளவாய்புரத்தைச் சோ்ந்த வன்னியராஜனிடமிருந்து அவற்றை வாங்கி வருவதாக அவா் தெரிவித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனைக் கைது செய்து, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 120 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.