வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திங்கள்கிழமை சிலைக்கு மாலை அணிவித்து, அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பலத்தை நிரூபிப்போம். தற்போது ஒவ்வொரு தொகுதியாகச் சென்று கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து தோ்தல் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம். அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அப்போதுதான் தெரியும். தொண்டா்கள் எதிா்பாா்க்கும் கூட்டணி அமையும்.
கடந்த மக்களவைத் தோ்தலின்போது நாட்டின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அமமுக அளித்தது. கூட்டணி குறித்து நான் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. நிா்வாகிகள், தொண்டா்களின் கருத்தின் அடிப்படையில்தான் முடிவெடுக்க முடியும். மக்களவைத் தோ்தல் வேறு; சட்டப்பேரவைத் தோ்தல் வேறு என்றாா் அவா்.