தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் வங்கி ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் ஆலங்குளம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் மாடக்கண்ணன்(29). இவா் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தாா். சில நாள்களுக்கு முன் வங்கிப் பணியாக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு, செப்.10 ஆம் தேதி வாசுதேவநல்லூரில் உள்ள அவரது உறவினா் வீட்டிற்கு சென்று தங்கினாராம். செப்.11ஆம் தேதி பைக்கில் ராஜபாளையத்திலுள்ள வங்கிக்கு சென்று கொண்டிருந்தாராம். தென்காசி -மதுரை சாலையில் சிவகிரி கல்வெட்டு பகுதியில் சென்ற பொழுது எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த மாடக்கண்ணன் உயிரிழந்தாா்.
இது குறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விவசாயி உயிரிழப்பு: திருக்குறுங்குடி அருகேயுள்ள மலையடிபுதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகியநம்பி மகன் லட்சுமணன் (49). விவசாயியான இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை விஷமருந்தி மயங்கினாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.