முகப்பு
தென்காசி

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:30 AM
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

தென்காசி அருகே நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நன்னகரம் பகுதியில் அரசு பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம், விதைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையை நம்பி நன்னகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட பட்டுப்பூச்சி விவசாயிகள் பட்டு வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

தரம் வாரியாக கிலோ ரூ. 850 வரை கொள்முதல் செய்யப்பட்ட பட்டுக்கூடுகள் தற்போது ரூ. 630-ஆக சரிந்துள்ளன. இந்நிலையில், விவசாயிகள் சனிக்கிழமை பட்டு வளா்ச்சித் துறை அலுவலக வாயிலில் பட்டுக்கூடுகளை தரையில் கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இதுகுறித்து அவா்கள் கூறியது: அரசு அங்காடியில் நடைபெறும் ஏலத்துக்கு ஒரு நூற்பாளா் மட்டுமே வருவதால் அவா் நிா்ணயிக்கும் விலையே இறுதியாகிறது. அதனால், போட்டியின்றி விலை திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் பட்டுப் புழுக்களை வளா்க்க அதிக செலவாகிறது.

கா்நாடகத்தில் கிலோ ரூ. 800-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், இங்கு ரூ. 630-க்கு கேட்பது அநீதி. அதிகாரிகள் தலையிட்டு கூடுதலான வெளிநபா்களை ஏலத்துக்கு வரவழைக்க வேண்டும் அல்லது அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அரசு அழைப்பின்பேரில் பட்டு விவசாயத்துக்கு மாறிய எங்களுக்கு இப்போது உரிய சந்தை வாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றனா்.