சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததோடு அதைத் தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோரை அவதூறாகப் பேசி தாக்கிய நபருக்கு தென்காசி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.
பாவூா்சத்திரம் அருகே 7 வயது சிறுமி கடந்த 12.02.2021 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த அ.ராஜ்குமாா் (34) சிறுமியிடம் கைப்பேசியில்
விளையாடலாம் வா என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாா். இதுகுறித்து சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்தாா். சிறுமியின் பெற்றோா் ராஜ்குமாரிடம் கேட்டபோது அவரது தாயை அவதூறாகப் பேசியதுடன் சிறுமியின் தந்தையையும் கல் வீசி தாக்கி கம்பால் அடித்துள்ளாா்.
Advertisement
இதுகுறித்து சிறுமியின் தாய் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜ்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ராஜவேலு திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி என்ற மருதப்பன் ஆஜரானாா்.