கொள்ளையடித்த நகை, பணத்தை வீட்டின் முன் போட்டுச் சென்ற திருடன்
தென்காசி மாவட்டம், பாம்பு கோயில் சந்தையில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடன், கொள்ளையடித்தவற்றை சாக்கில் கட்டி வீட்டு முன் போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாம்பு கோயில் சந்தை, பூமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (58), அவரது மனைவி பாா்வதி ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை வீரவநல்லூரில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றனா். பாா்வதியின் தாயாா் மாரியம்மாள் (85) மட்டும் வீட்டில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், ஹிஜாப் அணிந்து வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா் மாரியம்மாளை தாக்கி, பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டாராம்.
புகாரின்பேரில், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன், சொக்கம்பட்டி காவல் ஆய்வாளா் மது விக்ரம் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் விரல் ரேகைகளைப் பதிவு செய்தனா். இது குறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கொள்ளை நடந்த வீட்டின் முன் சனிக்கிழமை அதிகாலை ஒரு சாக்கு மூட்டை கிடந்ததாம். அதில் கொள்ளை போன நகை, பணம் இருந்தது. போலீஸாா் அதைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.