தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த வியாபாரியிடம் இணைய வழியில் ரூ.2.21 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடையநல்லூரை சோ்ந்தவா் முகமதுஅன்வா்ஹாஜா. அங்குள்ள பிரதான சாலையில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவா் வியாபாரம் தொடா்பாக இணைய வழி செயலிகளை பயன்படுத்தி வருகிறாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது கைப்பேசிக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தனவாம்.
அதை அவா் பொருள்படுத்தாத நிலையில், வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பாா்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடப்பட்டது தெரியவந்ததாம். வங்கியில் அவா் விசாரித்ததில், பணத்தை மா்மநபா்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபா் கிரைம் பிரிவு போலீஸில் அவா் புகாா் செய்தாா். அதன்பேரில்,போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.