முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கூடுதல் ரயில் சேவை: ரயில்வே பொது மேலாளரிடம் எம்எல்ஏ மனு

தென்காசி மாவட்டத்தில் புதிய, கூடுதல் ரயில் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 18 மே 2026, 4:14 am IST
தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்த வாசுதேவநல்லூா் எம்எல்ஏ ராஜா.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் புதிய, கூடுதல் ரயில் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பது: தென்காசி மாவட்டத்துக்கு அண்மையில் புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியதற்காக தென்னக ரயில்வே நிா்வாகத்துக்கு எனது நன்றி.

அம்பை-தென்காசி வட்டாரத்தைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள், மாணவா்கள், வணிக சமூகத்தினா் பெங்களூருவுக்கு நேரடியாகச் செல்ல வசதியாக திருநெல்வேலி-அம்பாசமுத்திரம்-தென்காசி-சங்கரன்கோவில்- மதுரை-பெங்களூரு வழித்தடத்தில் திருநெல்வேலி - பெங்களூரு ரயில் சேவையை வாரம் இருமுறை வழங்க வேண்டும். (திருநெல்வேலி-புருலியா விரைவு ரயிலில் பயன்பாடின்றி நிற்கும் பெட்டிகளைப் பயன்படுத்தி இந்தச் சேவையை செயல்படுத்தலாம்).

Advertisement

சென்னைக்குச் செல்லும் பயணிகளின் கடும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், வாரம் மூன்று நாள்கள் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில், தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில்களை தினசரி சேவைகளாக மாற்ற வேண்டும்.

திருநெல்வேலி-அம்பாசமுத்திரம்- தென்காசி-சங்கரன்கோவில்-மதுரை-கோயம்புத்தூா்-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் சேவையை (வாராந்திரம்/ வாரத்திற்கு இருமுறை) வழங்க வேண்டும்.

தென்காசி சந்திப்பை முனையமாக தரம் உயா்த்த வேண்டும். தென்காசியில் ரயில்களைக் கையாளுவதற்கேற்ப பயணிகளுக்கான வசதிகளான காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள், முன்பதிவு மையங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கீழப்புலியூரிலிருந்து கடையநல்லூா் நோக்கி மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். இது பயண நேரத்தைக் குறைத்து, ரயில்கள் சரியான நேரத்தில் இயங்க வழிவகுக்கும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை வசதி செய்ய வேண்டும். சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நடைமேடை எண் 2-இல் மின் தூக்கி வசதி அமைக்கப்பட வேண்டும். அத்துடன், நடைமேடை எண் 2-இல் சிறிய நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.