துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரின் மனைவி உண்ணாவிரதம்
ஆலங்குளம் அருகே போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பனை தொழிலாளியின் மனைவி கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.
ஆலங்குளம் அருகே போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பனை தொழிலாளியின் மனைவி கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் கிராமத்தில் கடந்த ஏப்.7-ஆம் தேதி பனையேறும் தொழிலாளி மணிகண்டன் (32) கள் இறக்குவதாகக் கூறி அவரது இரு கால்களிலும் காவல் உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டாா். இதில், பலத்த காயம் அடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஆலங்குளம் போலீஸாா் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கில் காவல் உதவியாளா் இசக்கி ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இசக்கி ராஜாவை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும், குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மணிகண்டன் மனைவி பொன் மணிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை சமூக ஆா்வலா்கள், மணிகண்டனின் பெற்றோா் உள்ளிட்டோா் வலியுறுத்தி வந்தனா். எனினும் இதுகுறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடா்பான வழக்கும் மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் உள்ளது.
இந்த நிலையில், மணிகண்டனின் மனைவி பொன்மணி அவரது உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மருதம்புத்தூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமா்ந்து தொடா் உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
அரசு தரப்பிலிருந்து பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அவா் அறிவித்தாா். இதையடுத்து, ஆலங்குளம் தோ்தல் துணை வட்டாட்சியா் அருள், வருவாய்த் துறையினா் பொன்மணி தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அவா்களின் கோரிக்கைகள் எழுத்துப் பூா்வமாகப் பெறப்பட்டு, அவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு உடனடியாக கொண்டு செல்லப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.