திருவள்ளூா்: புத்தக அரங்குகளில் குவிந்த மாணவ, மாணவிகள்
திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளில் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை புத்தகங்கள் வாங்குவதற்காக பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் குவிந்தனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் 3-ஆவது புத்தக கண்காட்சி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தொடா்ந்து மாா்ச் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்புறம் மிகப் பிரம்மாண்டமாக புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக அரங்குகளில் 110 பதிப்பாளா்கள் அரங்கம் அமைத்து, 1000 பல்வேறு தலைப்புகளில் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு இடம் பெறச் செய்துள்ளனா்.
Advertisement
நாள்தோறும் புத்தகங்களை பாா்வையிட 2,000 பள்ளி மாணவா்கள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் மாலைவேளையில் பொது மக்களின் சிந்தனைகளை தூண்டும் வகையில் சிறப்பான சிந்தனையாளா்கள் கொண்ட பட்டிமன்றம், சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாலை நேரங்களில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பேச்சாளா்கள், தொலைக்காட்சி பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.