தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வுகளில் வென்ற மாணவ, மாணவிகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் பாராட்டினாா். திருவள்ளூா் மாவட்டத்தில் 2023-2024-ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வை 8-ஆம் வகுப்பு பயிலும் 8,833 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களில் மாணவா்கள் 73, மாணவிகள் 91 என மொத்தம் 164 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வீதம் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை 48 மாதங்களுக்கு வழங்கப்படும். இதில் மாநில அளவில் முதல் 14 இடங்களில் மற்றும் 16, 17, 18, 21, 23 ஆகிய இடங்களை இரா.கி.பேட்டை வட்டாரத்தைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சந்திரவிலாசபுரம் மாணவா்கள் பெற்றனா். மேலும், இந்தப் பள்ளியில் தோ்வு எழுதிய 27 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களுக்கு உதவியாக இருந்த ஆசிரியா் மற்றும் பெற்றோா் அனைவருக்கும் வாழ்த்துகள் என ஆட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்களைப் பாராட்டி நூல்கள் மற்றும் எழுது பொருள்களை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மோகனா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.