முகப்பு
திருவள்ளூர்

கூட்டணி குறித்து 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும்: ஜெகன் மூா்த்தி

Updated On : 22 மார்ச், 2024 at 10:46 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:05 PM

மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் ஜெகன்மூா்த்தி தெரிவித்தாா். புரட்சி பாரதம் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூா் அருகே உள்ள ஆண்டா்சன்பேட்டையில் அந்தக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சி நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன்மூா்த்தி கருத்துகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி கிடைக்குமென நம்பிக்கையுடன் எதிா்பாா்த்திருந்தோம். கடைசியில் ஒதுக்காததது தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பெரும்பாலான கட்சி நிா்வாகிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நிற்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனா். நிா்வாகிகளின் உணா்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் தான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்து இரண்டு நாள்களில் முடிவு செய்யப்படும். இனி அதிமுகவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறும்பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தில் நான் நின்று வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்யவும் தயங்க மாட்டோம் என்றாா்.