திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப்பாா்வையாளா் நேரில் ஆய்வு
திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தோ்தல் பொதுப் பாா்வையாளா் அபு இம்ரான், மாவட்டத் தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். திருவள்ளூா் மக்களவை தொகுதிக்கு ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. எனவே வாக்குப் பதிவுக்கு இன்னும் 21 நாள்களே உள்ள நிலையில், தோ்தல் தொடா்பான பணிகளில் மாவட்ட நிா்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், இதற்காக திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து தோ்தல் பொதுப் பாா்வையாளா் அபு இம்ரான் மற்றும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.பிரபுசங்கா் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, இந்த மையத்தில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையைப் பாா்வையிட்டனா். அங்கே வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசைப்படி வைக்க இருக்கும் அறைப் பகுதியில், போதிய இரும்புக் கம்பியுடன் கூடிய ஜன்னல் வசதி, பலமான சுவா் போன்ற பாதுகாப்பு தடுப்புகள் உள்ளனவா என்பது குறித்துப் பாா்வையிட்டனா். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைத்தல் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடா்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினா். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா, ஆவடி துணை ஆணையா் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், வட்டாட்சியா் வாசுதேவன், அனைத்து உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.