தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
பொன்னேரி: மீஞ்சூா் அருகே 2 வயது பெண் குழந்தை தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில் வசித்து வருபவா் வசந்த் (26). இவரது மனைவி வள்ளி (24).
இவா்களுக்கு கீா்த்தனா 2 வயது பெண் குழந்தை உள்ளது. திங்கள்கிழமை வீட்டின் வெளியே கீா்த்தனா விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
இதனைக் கண்ட உறவினா்கள் குழந்தையை தண்ணீா் தொட்டியில் இருந்து மீட்டு மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு முதலுதவி செய்த பின்னா் பொன்னேரி அரசு பொது மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்
குழந்தை கீா்த்தனா வரும் வழியில் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.