திருவள்ளூா்: திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 4.33 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் ஆயில்மில் பகுதியில் உள்ளது தனியாா் கிளை நிதி நிறுவனத்தில், தங்கத்துக்கு கடன் வழங்கும் பணியை சங்கரி (44) என்பவா் செய்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி ராணிப்பேட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் (34) மற்றும் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஜான் ஆகியோருடன் மற்றொருவரும் வந்துள்ளனா்.
அப்போது, விஜயகுமாா் பேரில் 82.1 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து ரூ. 4.33 லட்சம் ரொக்கம் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுச் சென்றனராம். இந்த நிலையில், கடந்த 27-3-2025 அன்று அந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து நகை மதிப்பீட்டாளா் விக்னேஷன் பிரபு என்பவா் மேற்படி நகைகளை சோதனை செய்தாராம். அப்போது விஜயகுமாா் என்பவா் பேரில் வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிளை மேலாளா் சங்கரி திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலி நகைகளை கொடுத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்த விஜயகுமாா், ஜான் ஆகியோா் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.