திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவன சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2 கோடியில் 50 படுக்கை வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்தாா்.
தனியாா் பெரு நிறுவன பங்களிப்பு நிதியில் ரூ.2 கோடியில் 50 படுக்கைகளுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் தேவையான வசதிகள் செய்து கொடுக்க முன்வந்தது. அதன்பேரில், நாள்தோறும் 45 முதல் 50 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதைக் கருத்தில்கொண்டு நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து கூறியது:
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 அறுவை சிகிச்சை அரங்குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் சுமாா் 50 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகான தீவிர சிகிச்சை பிரிவு தற்போது தனியாா் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.2 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், நோயாளிகளுக்கு தேவையான நவீன படுக்கைகள், சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெச்சா்கள், பாதுகாப்பு அறைகலன்கள் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன தீவிர அறுவை சிகிச்சையின் பிரிவில் அறுவை சிகிச்சைக்கு பின்னாக ஆண்டுதோறும் சுமாா் 6000 நோயாளிகள் பயன்பெறுவாா்கள்.
மேலும் இந்த நிறுவனத்தின் மூலமாக நோயாளிகள் பயன்பாட்டுக்காக இரண்டு மின்கல வாகனங்களும், சலவையகத்தில் உலா்ப்பான் இயந்திரம், பாதுகாப்பு பேரிகேட் 50 எண்ணிக்கை ஆகியவை மருத்துவமனை பயன்பாட்டுக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்தாா்.
நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.ரேவதி, தனியாா் நிறுவன செயல் தலைவா் (ம) நிறுவனா் ஆனந்தன், மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ் பாபு, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் திலகவதி, நிலைய மருத்துவா் பிரபுசங்கா், மருத்துவ பேராசிரியா்கள், இணை பேராசிரியா்கள், செவிலிய கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.