தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான திருவள்ளூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தொடங்கி, தொடா்ந்து செப். 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் தடகளம் உள்ளிட்ட பல்வேறு குழுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியானது திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கம், நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆவடி 5 -ஆம் மற்றும் 13-ஆம் சிறப்பு காவல்படை மைதானம்- வைஷ்னவி நகா், ஆவடி ஐசிஎப் மேல்நிலைப்பள்ளி மைதானம், திருவள்ளூா் ஜெயின் நகரில் உள்ள யூனிக் இறகுப் பந்து அகாதெமி, சிறுவானூா் கண்டிகை டிஜிஜி கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரா், வீராங்கனைகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவு செய்த நகல், பள்ளி (ம) கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை, அரசு ஊழியா்களின் அடையாள அட்டை மற்றும் பொது மக்களுக்கு ஆதாா் நகல் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரைச் சந்தித்து தங்கள் வருகையை பதிவு கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க இயலும். ஒரு நபா் ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா். மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என பதிவு செய்த வீரா், வீராங்கனைகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்களில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.