திருவள்ளூா்: மாற்றுத்திறனாளி மாணவவா்கள் 32 பேருக்கு ரூ.16.42 லட்சத்தில் காதொலிக் கருவிகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 442 மனுக்களைப் பெற்று, தொடா்புடைய துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் காதொலி கருவிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதை தொடா்ந்து தனியாா் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையவா்களுக்கு 500 காதொலிக் கருவிகள் ரூ.16,42,500 லட்சத்தில் பெறப்பட்டு அதனை வழங்கும் அடையாளமாக சிறப்புப்பள்ளிகளைச் சோ்ந்த 32 மாணவா்களுக்கு 64 காதொலி கருவிகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நிா்மலா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் பங்கேற்றனா்.