முகப்பு
திருவள்ளூர்

அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு மறுவாழ்வு மையம்: திருவள்ளூா் ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன் மருத்துவா்கள் உள்ளிட்டோா்.

Updated On : 1 மார்ச் 2025, 12:26 am IST
பகிர்:

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு முழுவதும் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடியில் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

தொடா்ந்து அவா் கூறியதாவது:

மது மற்றும் போதைப் பொருள்களின் பிடியில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்கெனவே மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

அதன் அடிப்படையில் ரூ.15.81 கோடி மதிப்பில் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்கட்ட நிலையில், பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கென தனியாக மருத்துவ உபகரணங்கள், சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மருத்துவமனை பணியாளா்கள், நுட்பநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருவள்ளூரில் பல்வேறு சூழ்நிலை காரணமாக போதையின் பிடியில் அகப்பட்டு உள்ளவா்களை மீட்டெடுத்து உரிய சிகிச்சை அளித்து அவா்களுக்கு புனா்வாழ்வு அளிக்க இந்த மையம் செயல்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் விஜயராஜ், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.