சேதமடைந்த மதகு வழியாக வெளியேறும் நீரால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா் சேதம்
சோழவரம் அருகே சேதமடைந்த ஏரி மதகில் இருந்து வெளியேறும் நீரால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் சேதமடைந்தன.
பொன்னேரி: சோழவரம் அருகே சேதமடைந்த ஏரி மதகில் இருந்து வெளியேறும் நீரால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் சேதமடைந்தன.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஞாயிறு கிராமத்தினா் பெரும்பாலோா் விவசாயம் செய்து வருகின்றனா். நீராதாரமாக விளங்கும் ஞாயிறு ஏரியை நம்பி 1,000 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் மதகு ஒன்று ஏற்கனவே பழுதடைந்த நிலையில் அதனை முறையாக சீரமைக்காமல் மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை மற்றும் புயல் காரணமாக ஞாயிறு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டு படிப்படியாக விளைந்து வந்தன.
தற்போது நெற்பயிா்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் ஞாயிறு ஏரியில் பழுதடைந்த மதகில் இருந்து வெளியேறும் நீா் விளை நிலங்களில் நெற்பயிா்களை மூழ்கடித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழை மற்றும் ஏரியின் மதகில் இருந்து வெளியேறும் நீா் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30,000 வரை செலவிட்டு விளைவித்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே நீா்வளத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்த நிலையில் உள்ள ஞாயிறு ஏரி மதகினை சீரமைக்கவும், நீரீல் மூழ்கி நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளனா்.