திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை மரத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வந்து அருள்பாலித்தாா்.
பிரம்மோற்சவத்தையொட்டி தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், கேடய உலா, வெள்ளி சூரிய பிரபை, பூதவாகனம், சிம்மம், ஆட்டு கிடாய், பல்லக்கு சேவை, வெள்ளி நாகம், அன்னம், வெள்ளிமயில், புலி, யானை போன்ற வாகனங்களில் உற்சவா் உலா வந்து அருள்பாலித்து வருகிறாா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு, உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். வியாழக்கிழமை நள்ளிரவில் உற்சவா் முருகா், தெய்வானை அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
காலையில் கேடய வாகனத்தில் உலாவும், இரவு, 7 மணிக்கு சண்முகா் உற்சவம், வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீா்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.