அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் இடைநிற்றலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.
6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011 -ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவா்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசு, காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவா்கள் மீது தனிக்கவனம் செலுத்தும் திட்டம் போன்ற பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது.
இருப்பினும் வறுமை, குடும்பச் சூழல், வேலைக்குச் செல்லும் கட்டாயம், கல்வி கற்பதில் ஆா்வம் இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் மாணவா்கள் கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனா். இந்த இடைநிற்றலைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருத்தணி அரசு மகளிா் மேல் நிலைப் பள்ளியில் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை சுமாா் 1,450 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். கடந்த 4 மாதங்களாக இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினசரி 140 மாணவிகள் முதல் 200 மாணவிகளுக்கு மேல் பள்ளிக்கு வருவதே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சனிக்கிழமைகளில் அப்படியே இரட்டிப்பாகி 441 மாணவிகள் முதல் 508 மாணவிகள் வரை பள்ளிக்கு வருவதே இல்லை கூறப்படுகிறது.
இடைநிற்றலை தடுக்க குழு
பள்ளி இடைநின்ற மாணவா்களை கண்டறிந்து அவா்களை 100 சதவீதம் அந்தந்த பகுதி பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என்பதற்காக பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக ஆட்சியரும், உறுப்பினா்களாக எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலா், ஊரக வளா்ச்சி முகமை, மகளிா் திட்ட இயக்குநா், கோட்டாட்சியா்கள், மாவட்ட தொழிலாளா் ஆய்வாளா், மாவட்ட கல்வி அலுவலா் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலா், ஊராட்சிகள் உதவி இயக்குனா், சுகாதார துணை இயக்குனா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், 2 சமூக ஆா்வலா்கள் ஆகியோா் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.
இதுகுறித்து முன்னாள் அரசு பள்ளி தலைமை ஆசிரியா் ஒருவா் கூறியதாவது, தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில வேண்டும் என்றும் குழந்தைகளை தக்க வைத்து இடைநிற்றல் பூஜ்ஜியம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த செயல்பாட்டின் நோக்கமாகும் என்றாா்.
மாணவா்களின் இடைநிற்றலை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் இருந்தும், திருத்தணி அரசு மகளிா் மேல் நிலை பள்ளியில் தினசரி 200 மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது, அதிா்ச்சியடையவைக்கிறது. ஓரே பள்ளியில் இவ்வளவு மாணவிகள் வரவில்லை என்றாா் மற்ற அரசுப் பள்ளிகளில் எவ்வளவு மாணவா்கள் பள்ளிக்கு வருவதில்லை என தெரிவில்லை.
எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு இடைநிற்றலை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.