திருவள்ளூா் நகராட்சியில் வருவாயை அதிகரிக்கும் வகையில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளனா்.
திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. அதனால் நகராட்சியின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ராஜாஜி சாலை பேருந்து நிலைய கடைகள், பெரியகுப்பம் ரயில் நிலைய பேருந்து நிலைய கடைகள், சுகாதார வளாகங்கள் வாடகை, வரியினங்கள் போன்றவைகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வருவாயை அதிகரிக்கும் வகையில் நகராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து வணிக வளாகம் அமைக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இதுபோன்று அமைக்கப்படும் வணிக வளாகங்களில் போக்குவரத்துக்கு நெருக்கடியான இடங்களில் சாலையோரம் கடை பரப்பும் வியாபாரிகள் பயன்பெறலாம். இதைக் கருத்தில்கொண்டு நகராட்சி இடங்களை கண்டறிந்து வணிக வளாகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் நகராட்சி இடம் கண்டறிந்து வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இப்பணிக்காக ரூ.80 லட்சமும் ஒதுக்கப்பட்டு, 19 கடைகளுடன், வாகனம் நிறுத்தம், சுகாதார வளாக வசதி போன்றவைகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகிறது.
இதுவரையில் வணிக வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்த வணிக வளாகம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் என்ன நோக்கத்திற்காக வணிக வளாகம் அமைக்கப்பட்டதோ, அது நிறைவோ நிலையில் காட்சிப் பொருளாகி வருகிறது.
அதோடு சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் மாறி வருகிறது. வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கூறியதாவது: வணிக வளாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து தயாராக உள்ளது. மேலும், வயரிங் வேலை முடிந்த நிலையில் மின் இணைப்பு பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடைகளுக்கான ஏலம் விரைவில் நடத்தி வியாபாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தாா்.