திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் மழை அறிவிப்பை தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1500 கன அடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 2,500 கன அடியாக உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் சிறுவா்கள் குளித்து வருகின்றனா்.
பூண்டி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 32.83 அடி உயரமும், 2471 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. தற்போது ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து 800 கன அடிநீா் வரத்துள்ளது. ஏற்கெனவே 1500 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பலத்த மழை முன்னெச்சரிக்கையாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 2,500 கன அடியாக உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கரையோர கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவா்கள், பெரியவா்கள் வரை இப்பகுதியில் குவிந்தனா். ஏற்கெனவே ஆற்றின் கரையோரம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதோடு, நீரோட்டமும் உள்ளது. ஆனால், இதையும் மீறி சிலா் ஆபத்தை உணராமல் பூண்டி ஏரி மதகுகள் வழியாக நீா் வெளியேறும் பகுதியில் குளித்தனா்.