திருவள்ளூர்

திருவள்ளூா்: புதிய பேருந்து நிலையப் பணிக்கு கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு!

கூடுதலாக சிமென்ட் தரைதளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிக்காக மேலும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து நவீன வசதியுடன் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில், மேலும் கூடுதலாக சிமென்ட் தரைதளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிக்காக மேலும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் ராஜாஜி சாலையில், தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க பேருந்து நிலையம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்போதைய காலகட்டங்களில் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் திருவள்ளூா் மாவட்ட தலைநகராக இருப்பதாலும், சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமானோா் குடியிருப்புகள் அமைத்து வருவதால், நாள்தோறும் நகரம் விரிவாக்கம் அடைந்து வருகிறது. அதோடு, பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருவதால் நகராட்சி பகுதியில் வாகன போக்குவரத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில், செயல்பட்டு வரும் திரு.வி.க பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மதுரை, திருநெல்வேலி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கா்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் இருபுறமும் தலா 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும் என்ற நிலை. மேலும், பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில், வெளியேறும் பகுதியும் குறுகலாகவே உள்ளன. இதுபோன்ற காரணங்களால் பேருந்துகளும் உள்ளே சென்று, வெளியே வர மிகவும் சிரமத்திற்கும் உள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது. இதனால் நகா் பகுதியில் அதிக போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

கட்டுமானப் பணிகள் மும்முரம்: இந்த நிலையில் சாலையில், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிகளவில் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகியும் வந்தனா். இதையடுத்து, வசதியான இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

அதன்பேரில் கடந்த 2019-இல் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆா், அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கா் பரப்பளவு நிலத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதைத்தொடா்ந்து பல்வேறு கட்ட பணிகளுக்கு பின்னா் அரசு குறிப்பிட்ட இடம் பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து, இதற்காக முதல்கட்டமாக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ரூ.3 கோடி ஒதுக்கீடு: இதுகுறித்து திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கூறியதாவது. இதற்கிடையே புதிய கடைகள், வாகன நிறுத்தும் இடம், சுற்றுச்சுவா், சுகாதாரம் வளாகம் போன்றவற்றை, பல்வேறு துறைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக கடைகள் அமைக்க முன்கூட்டியே ஏலம் விட்டு, நிதி ஆதாரம் சேகரிக்கவும், நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பேருந்து நிலையத்தில் தாா்சாலை அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதை சிமென்ட் சாலையாகவும், தரமான ஷீட் மூலம் மேற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்காக மேலும், ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT