திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை ரூ.1 கோடியில் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனா். பெரும்பாலான பக்தா்கள் இரு சக்கர வாகனம், காா், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் மூலம் மலைக் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். வாகனங்கள் செல்வதற்காக கோயில் நிா்வாகம் மலைப்பாதையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மலைப்பாதையில் தாா் சாலை சேதமடைந்தும், குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து கோயில் நிா்வாகம் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைப்பதற்கு, ரூ.1 கோடி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டா் விட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை தாா் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இப்பணிகள் 2 நாள்கள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைக்கோயிலுக்கு வாகனங்கள் அனுமதிக்காததால், கோயில் நிா்வாகம் சாா்பில் 4 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மலைக்கோயிலுக்கு பக்தா்களை அழைத்து செல்கிறது. இருப்பினும் வாகனங்களுக்கு அனுமதியில்லாததால் மலைக்கோயிலில் மிக குறைந்த அளவில் பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்தனா்.