தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே பாா்வையற்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தை தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கைவண்டூா் ஊராட்சிக்குட்பட்ட தொழுதவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுமதி. இவருக்கும் ஆந்திர மாநிலம் வரதபாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவருக்கும் திருமணமான நிலையில் கண் பாா்வை குறைபாடு உள்ளதை மறைத்ததன் காரணமாக 6மாத கா்ப்பிணியாக இருக்கும் போது கணவா் பிரிந்து சென்ாக கூறப்படுகிறது.
இவருக்கு குழந்தை யாசிதா(2) உள்ளாா். இந்த நிலையில் தாய் சுமதி வீட்டுக்குள் இருக்க குழந்தை யாசிதா புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்ததாம். அப்போது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து கீழே ஊற்றி விளையாடியபோது குழந்தை தொட்டியில் தவறி விழுந்துது.
Advertisement
எனவே தாய்க்கு கண் தெரியாத காரணத்தால் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருப்பவா்கள் விரைந்து வந்து பாா்த்தபோது தண்ணீா் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து குழந்தையை மீட்டனா். திருவள்ளூா் அரசு கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.