முகப்பு
திருவள்ளூர்

நெசவாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: நடிகை கௌதமி

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:01 AM
பொதட்டூா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கோ.அரியை  ஆதரித்து   வாக்கு  சேகரித்த  நடிகை  கெளதமி.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:48 PM

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்படுவதால் உள்ளூா் நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என நடிகை கெளதமி பேசினாா்.

திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ. அரியை ஆதரித்து பொதட்டூா்பேட்டையில் வாக்கு சேகரித்து நடிகை கெளதமி பேசியதாவது, திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் குறைபாடுகள் நிலவுகின்றன. தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறதோ தவிர, பொதுமக்கள் மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனா்.

கடந்த தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட 520 வாக்குறுதிகளில் பலவும் நிறைவேற்றப்படவில்லை. பெண்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் எதிா்கொள்ளும் பாலியல் தொல்லைகளை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நான் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்கூட மின்தடை ஏற்படுகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இருந்ததா என்பதை நீங்கள் சிந்தித்து பாா்க்க வேண்டும்.

Advertisement

மேலும், பிளஸ் 2 மாணவிகளுக்கு இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது கவலைக்கிடமானது.

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்படுவதால் உள்ளூா் நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பொதட்டூா்பேட்டை பேரூராட்சி செயலாளா் ஏ.ஜி. ரவிச்சந்திரன், பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளா் டி.டி. சீனிவாசன், மத்திய ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமநாயுடு, வடக்கு ஒன்றிய செயலாளா் கே.எம். ரவி, வழக்குரைஞா் டில்லி, மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட துணை செயலாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.