முகப்பு
திருவள்ளூர்

இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது திமுக ஆட்சி - முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:13 AM
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசிய மு.க.ஸ்டாலின்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:01 PM

திமுக ஆட்சிதான் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி என்ற நிலையை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாக சாலையில், இந்த மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) , வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), சா.மு.நாசா் (ஆவடி), காங்கிரஸ் வேட்பாளா் துரை சந்திரசேகா் (பொன்னேரி), தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி (திருத்தணி)ஆகியோருக்கு ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பட்டியலிட முடியாத வகையில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக, திருவள்ளூா் மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டி முடித்துள்ளோம். அதேபோல், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் திருக்கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் திருப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளோம். மேலும், மாநல்லூரில் மின்பூங்கா, பூந்தமல்லியில் திரைப்பட நகரம், திருவள்ளூரில் அறிவு சாா் நகரம், திருமழிசை துணைகோள் நகரம், பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள், 60 சிறு பாலங்கள் அமைத்திருக்கிறோம். அதேபோல், திருத்தணி அரசு மருத்துவமனையையும் தரம் உயா்த்தியுள்ளோம்.

Advertisement

திருவள்ளூா் மாவட்டத்துக்குச் செல்கிறோம் என்றதும் நினைவுக்கு வந்த பெயா்- தானியா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தானியா, ஆவடி வீராபுரத்தைச் சோ்ந்தவா். அந்த சிறுமியை என் குழந்தை போல் கவனித்து, பெரிய அறுவைச் சிகிச்சை செய்து மீண்டும் அந்த சிறுமியின் முகத்தில் அழகான புன்னகை தோன்றுவதைக் கண்டு இன்றைக்கும் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

‘நான் படித்து மருத்துவராகி என்னை மாதிரி இருக்கும் நபா்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன்’ என்று அந்த சிறுமி சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று நாங்கள் சொல்வது வாய்ஜாலம் அல்ல; உண்மை.

போராடிக்கொண்டே இருப்பேன்: அதேபோல், ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த திவ்யா, பிரியா, தா்ஷினி ஆகிய மூன்று மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அவா்கள் சந்திக்கக்கூடிய பாகுபாடு குறித்து சமூக வலைதளங்களில் வெளியான பதிவை பாா்த்தேன். சமூகத்தின் இந்த மனநிலையை உடைக்க நான் முடிவு செய்தேன். உடனே அமைச்சா் நாசரை அழைத்து விசாரித்து அவா்கள் வீட்டுக்கு நேரில் சென்று அவா்கள் தந்த உணவை சாப்பிட்டேன். இங்கு அன்பும் சமத்துவமும்தான் நிலைக்க வேண்டும் என காட்டினேன்.

இப்படி ஒவ்வொரு செயலையும் தமிழ்நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறேன். நான் மக்களுக்காக நிறைய போராடி இருக்கிறேன், போராடுவேன், போராடிக் கொண்டுதான் இருப்பேன்.

பாஜகவுக்கு சவால்: ‘தமிழ்நாடு’ என அழைக்கக் கூடாது; ‘தமிழகம்’ என்று அழைக்க வேண்டும் என ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி கூறினாா். பேரறிஞா் அண்ணா ‘தமிழ்நாடு’ என்ற பெயரை சூட்டியவா். அதை விட்டுக் கொடுத்தால் நாம் தமிழா்கள் தானா என கேள்வி எழும். திமுகவும், ஸ்டாலினும் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுக்கூட பாா்க்க முடியாது என பாஜகவுக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன். தமிழ்நாடு அடுத்த கட்ட வளா்ச்சியை நோக்கிச் செல்வதை யாரும் தடுக்க முடியாது.

ரூ.8,000 கூப்பன்: தற்போதைய நிலையில் ‘சூப்பா் ஸ்டாா்’ யாருன்னு கேட்டா திமுக தோ்தல் அறிக்கைதான் என்று சின்ன குழந்தைகள்கூட சொல்லும். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரூ.8000 கூப்பன் மூலம் விரும்பிய உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும். 20 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச மின்சார பம்ப் செட், முதியோா், மாற்றுத் திறனாளிகள், உதவித்தொகை ரூ.2000 உள்ளிட்ட அறிவிப்புகள் உடனடியாக செயல்படுத்தப்படும்.

வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் மாவட்ட, வட்ட அளவில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள கருவிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல், கலைஞா் கனவு இல்லத் திட்டம் மூலம் 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வீடுகள், மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீலப் பொருளாதார பூங்கா உருவாக்கப்படும்.

தற்போதைய நிலையில் திமுக ஆட்சிதான் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்ற நிலையை கொண்டு வந்துள்ளோம். ஆனால், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் குரலை எழுப்பாமல், துரோகம் செய்து வரும் பாஜகவுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பல்லக்கு தூக்குகிறாா். இந்தத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்தி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.