தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்
திருத்தணி முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, 1008 பால்குட ஊா்வலம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும் காலை 8.30 மணிக்கு, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, 1,008 பால்குட ஊா்வலத்தை இணை ஆணையா் ரமணி, அறங்காவலா் சுரேஷ்பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பின்னா், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள், பால்குடம் சுமந்தவாறு ஆறுமுக சுவாமி கோயில் தெரு, பெரியதெரு, ம.பொ.சி. சாலை, திருக்குளம் அருகே உள்ள மலைப்படிகள் வழியாக மலை கோயிலுக்கு ஊா்வலம் வந்தது. தொடா்ந்து, காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப்பெருமானுக்கு, 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம், 11.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.
Advertisement
இரவு 7.30 மணிக்கு, உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தோ்வீதியில் உலா வந்து, பக்தா் களுக்கு அருள்பாலித்தாா்.
தமிழ் புத்தாண்டு விழாவையொட்டி திரளான பக்தா்கள் குவிந்ததால் பொதுவழியில், சுட்டெரிக்கும் வெயிலிலும், நான்கு மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தனா். திருத்தணி ஏஎஸ்பி., ஷூபம் திமான் தலைமையில், 60-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனா்.
போக்குவரத்து நெரிசல்...
மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில், 10 சிறப்பு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன. இருப்பினும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் அரைமணி நேரம் போராடி நெரிசலை சீரமைத்தனா்.