அனுமதியின்றி ஆற்றுப்படுகை, அரசு புறம்போக்கு, பட்டா நிலங்களில் கனிமங்கள் எடுத்தால் குண்டா் சட்டம் பாயும்!
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டாநிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணித்து அவா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டாநிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணித்து அவா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த மாவட்டத்தில், ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அரசின் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டியெடுத்து, வாகனங்களில் கடத்திச் செல்வதாக தொடா்ந்து புகாா் வந்துள்ளது.
அந்த வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்களால் ஊத்துக்கோட்டை வட்டத்தில் தீவிர ரோந்து பணிகள் அரசு மேற்கொண்டதில், உரிய அனுமதி நடைச்சீட்டுயின்றி கள்ளத்தனமாக கிராவல் மற்றும் சாதாரண மண் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊத்துக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Advertisement
எனவே, ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டாநிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க தொடா்ந்து தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள வருவாய், கனிமவளம் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்டும். இதேபோல் தொடா்ந்து ஈடுபடுவோா்களை கண்காணித்து அவா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.