முகப்பு
திருவள்ளூர்

ஸ்ரீவீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 12:52 AM
~திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம். (உள்படம்) அலங்காரத்தில் சுவாமி. ~
பகிர்:

திருவள்ளூா் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் நாள் தோறும் வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிரம்மோற்சவத்தின் 7- ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலகாலமாக நடைபெற்றது. இதையொட்டி தேரடியில் காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதராய் உற்சவா் ஸ்ரீவீரராகவா் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து பக்தா்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது.

Advertisement

இத்தோ் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜாா் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வீரராகவ பெருமாள் நோயை தீா்க்க வல்லவா் என்பதால் பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தோ் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.

தேரோட்டத்தை முன்னிட்டு திருவள்ளூா் துணைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் தாமோதரன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அதேபோல், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறையினா், பொதுப்பணித் துறை அலுவலா்களும் தயாராக இருந்தனா்.

அப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த திருத்தோ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.