திருவள்ளூா் மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 9,425 பேருக்கு மடிக்கணினிகளை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.
திருப்பாச்சூா் தனியாா் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று 102 தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 9,425 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது. திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு மொத்தம் 4308 மடிக்கணினிகள் கடந்த மாதம் 5-ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக இறுதியாண்டுக்கு முந்தைய மாணவா்கள் 4231 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் 31 தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு 4481 பேருக்கு மடிக்கணினிகள் கடந்த மாதம் 27-ஆம் தேதி வழங்கப்பட்டன.
அந்த வகையில் 102 தனியாா் கல்வி நிறுவனங்கயில் பயிலும் மாணவ, மாணவிகள் 9,425 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 8539, தனியாா் கல்வி நிறுவனம் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 18,337 என மொத்தம் 26,876 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயகுமாா், நகா்மன்றத் தலைவா் பா.உதயமலா் பாண்டியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) யுவராஜ், உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஆகியோா் பங்கேற்ரனா்.