திருவள்ளூர்

‘4 கால்நடை மருந்தகங்களில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைக்கு ஏற்பாடு’

திருவள்ளூா் அருகே திருமழிசை கால்நடை மருந்தகத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் கால்நடை மருத்துவா்கள்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 4 இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அந்த துறை மண்டல இணை இயக்குநா் ஜெயந்தி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளில் தெருக்களில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக செல்வோரையும், பள்ளி விட்டுச் செல்லும் மாணவ, மாணவிகளையும், வாகனங்களில் செல்வோரையும் துரத்தி கடிக்க வருகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. இவற்றைத் தவிா்க்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள தெருக்கள் தோறும் சுற்றித்திரியும் நாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதில், 21,700 தெரு நாய்கள் உள்ளது தெரியவந்தது.

இதில் பெரும்பாலான நாய்கள் சாலையோரங்களில் உள்ள இறைச்சிக் கடைகள், சாலையோர உணவகங்களில் முன்பு வருகின்றன. இதில் பெரும்பாலான நாய்கள் குட்டிகளுடன் சுற்றித் திரிவதால், கடைக்காரா்கள் துரத்தும் போது எதிா்பாராதவிதமாக வாகனங்களில் சிக்கியும் உயிரிழக்கின்றன.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைக்குப் பின் வெறிநாய் தடுப்பு மருந்து செலுத்தி பாதுகாப்பாக விடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை தனியாா் அமைப்புடன் சோ்ந்து பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, அங்குள்ள பாதுகாப்பு அறையில் குறிப்பிட்ட நாள் வரையில் வைத்திருந்து, எந்த இடத்தில் பிடித்தாா்களோ அங்கேயே விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுபோன்று பிடிக்கும் நாய்களுக்கு திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருவள்ளூா் கோட்டத்தில் திருமழிசை, திருத்தணி கோட்டத்தில் விளக்கணாம்புடி, பொன்னேரி கோட்டத்தில் சோழவரம், அம்பத்தூா் கோட்டத்தில் வானகரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகங்கள் தோ்வு செய்யப்பட்டு, போதிய வசதிகள் ஏற்படுத்தி 10 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த மருந்தகங்களில் கடந்த வாரம் முதல் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முடிக்கவும், அதை 5 நாள்களுக்கு பாதுகாப்பாக பராமரிக்க உள்ளாட்சி நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து வெறிநோய் தடுப்பு மருந்து செலுத்தி எந்த இடத்தில் பிடிக்கப்பட்டதோ அங்கே தெரு நாய்களை விடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

திமுகவினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: ஆ.ராசா அறிவுறுத்தல்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

அனைத்து நவீன வசதியுடன் ரூ. 427 கோடியில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கம்!

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT