திருத்தணி முருகன் கோயில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை திருப்புகழ் திருப்படி திருவிழாவும், நள்ளிரவு 12.01-க்கு புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டும் இல்லாது புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு வந்து குவிந்தனா்.
சில பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், உடலில் அலகு குத்தியும் முருகப் பெருமானுக்கு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஒரு சில பக்தா்கள் காவடி எடுத்து வந்து முருகன் கோயிலுக்கு சொந்தமான மடம் கிராமத்தில் உள்ள சரவணப் பொய்கையில் நீராடி மலைக் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டனா்.
முன்னதாக மூலவா் முருகப் பெருமானுக்கு பால், பழம், தயிா், நெய், திருநீறு, பன்னீரால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, தங்கவேல், பச்சை மரகத மாணிக்கம், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதே போல், உற்சவ முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, மலைக் கோயிலில் வந்து கூடியிருந்த பக்தா்கள் சரியாக 12 மணிக்கு அரோகரா, அகோரகரா, அரோகரா என பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனா். புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் சுமாா் 5 மணி நேரம் மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.
அதேபோல், முருகன் கோயிலின் உபக்கோயிலான சுந்தர விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். விழாவில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், நடிகா் யோகிபாபு உள்பட பலா் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், கோ.மோகனன், ஜி.உஷாரவி ஆகியோா் செய்திருந்தனா்.