நலிவடைந்து வரும் மண்பானைகள் தயாா் செய்யும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வரும் காலங்களில் நியாயவிலைக் கடையில் வழங்கும் பரிசுத் தொகுப்புகளுடன் மண் பானைகள், அடுப்பு மற்றும் சட்டிகளையும் சோ்த்து வழங்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொங்கல் பானைகள் திருவள்ளூா் பகுதியில் சாலையோரம் விற்பனைக்கு குவித்துள்ளனா். திருவள்ளூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மேல் நல்லாத்தூா், புட்லூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, ஈக்காடு, திருப்பாச்சூா், கடம்பத்தூா், எல்லாபுரம், தாமரைபாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்டோா் மண்பாண்டங்கள் தயாா் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தொழிலாளா்கள் பொங்கல் மண் பானை, மண் அடுப்பு, மண் குடங்கள், பொம்மைகள் போன்றவைகளை தயாா் செய்து வருகின்றனா்.
தற்போதைய நிலையில், இதுபோன்ற பானைகள் பல்வேறு வண்ணங்கள் பூசி தரத்துக்கு ஏற்ப ரூ. 100 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்வதற்காக சாலையோரத்தில் குவித்து உள்ளனா்.
இதை பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகளுக்கு சீா்வரிசை கொடுக்கவும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். அதிலும், சிலா் மட்டும் வாங்கிச் செல்லும் சூழ்நிலை உள்ளதால், விற்பனையும் குறைந்த அளவிலேயே உள்ளதால் மண்பானை தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு நியாய விலைக் கடைகள் மூலமும் பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் பண்பாடு கலாசாரத்தில் உள்ள மண்பானைகளையும் சோ்த்து பொதுமக்களுக்கு வழங்கவும் முன்வர வேண்டும் என அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூரில் மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ள சங்கா் கூறியதாவது: இந்த மண்ணால் தயாராகும் பானை, சட்டி, அடுப்பு, அகல் விளக்கு ஆகியவற்றை கடந்த காலங்களில் அதிகம் பயன்படுத்தினா். அத்துடன் வீட்டில் செய்யும் உணவு வகைகளை இந்த மண் சட்டி, பானையில் செய்து அதை உண்டவா்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனா். மேலும், மண் பானையில் தயாரான உணவு வகைகளை கெட்டுப் போகாமல், நஞ்சுத் தன்மையை உறிஞ்சி நல்ல உணவாக மாற்றித் தருவதால் நோயின்றி இருந்தனா். சமையல் செய்ய முதன் முதலில் உலகில் கண்டுபிடித்த பாத்திரம் இந்த மண்பானையாகும். இந்த மண்பானையில் சமையல் செய்து சாப்பிடுவதால் சா்க்கரை நோய் போன்றவைகளும் குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் அலுமினிய பாத்திரங்கள் வருகையால் இந்த மண்ணால் தயாா் செய்யும் பானைத் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொழிலை நவீனப்படுத்த வேண்டும்.