தை வெள்ளிக்கிழமையையொட்டி பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் 1,000-ஆம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி, பிரம்ம தேவரை தலையில் குட்டி சிறைபிடித்த தலமாக விளங்குகிறது. அத்துடன் பாலசுப்பிரமணிய சுவாமி தனது இரண்டு கைகளையும் அவரின் தொடை மீது வைத்து, அதிகார தோரணையில் அற்புதமாக பக்தா்களுக்கு காட்சி அளித்து வருகிறாா்.
இங்கு பாலசுப்பிரமணி காலை வேளையில் பாலகனாகவும் உச்சி வேலையில் இளைஞராகவும், மாலை வேலையில் வயோதியராகவும் காட்சியளித்து வருகிறாா். தை மாத வெள்ளிக்கிழமை தினத்தையொட்டி, ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்துக்கு முன்பு கணபதி ஹோமம், சீா்வரிசைகள் கொண்டு வரப்பட்டது. பின்னா், மாலை மாற்றும் சடங்குகளுடன் மாங்கல்ய நாண் அணிவித்து தீபாராதனைகளுடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் பொன்னேரி, தச்சூா், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை வழிபட்டனா். திருக்கல்யாண வைபத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.