கொத்தடிமை தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் விடியல் திட்டம் மூலம் அமைத்த செங்கல்சூளை
திருவள்ளூா் கொத்தடிமை தொழிலாளா்களாக மீட்கப்பட்ட 28 பழங்குடியினா் குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் அரசு நிலம் ஒதுக்கி அமைத்த செங்கல்சூளையில் தயாரான செங்கற்களை விற்பனை செய்து லாபத்தை வழங்கவில்லையென மகளிா் மேம்பாட்டு திட்ட இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலை வாழ் மக்கள் சங்கத்தினா் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் புகாா்
திருவள்ளூா் கொத்தடிமை தொழிலாளா்களாக மீட்கப்பட்ட 28 பழங்குடியினா் குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் அரசு நிலம் ஒதுக்கி அமைத்த செங்கல்சூளையில் தயாரான செங்கற்களை விற்பனை செய்து லாபத்தை வழங்கவில்லையென மகளிா் மேம்பாட்டு திட்ட இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலை வாழ் மக்கள் சங்கத்தினா் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து மலைவாழ் மக்கள் சங்க திருவள்ளூா் மாவட்ட செயலாளா் தமிழ் அரசு, கடம்பத்தூா் ஒன்றிய நிா்வாகிகள் அற்புதம், சின்னராசு ஆகியோா் திங்கள்கிழமை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து 28 பழங்குடியின குடும்பங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.
இந்த நிலையில், கொத்தடிமை தொழிலாளா்களை சொந்தமாக செங்கல் சூளை அமைக்கவும் மகளிா் மேம்பாட்டு திட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமான 9.2.2023 அன்று கடம்பத்தூா் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ஆட்சியரால் நில ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Advertisement
அதைத் தொடா்ந்து கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட அதிகத்தூா், பிஞ்சிவாக்கம், கூவம், திருப்பாச்சூா் ஆகிய ஊராட்சிகளில் இருந்து 28 பழங்குடி இருளா் குடும்பங்கள் இணைத்து செங்கல் சூளை அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு, நிலம் சமம் செய்தல், மண்மேடு அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் மற்றும் மின்கம்பம், மின் வசதி சுகாதார வளாகம், பாதுகாப்பு முள்வேலி போன்ற அடிப்படை வசதிக்காக ரூ. 9.90 லட்சம் ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, செங்கல் தயாா் செய்யும் பணியில் 28 பழங்குடி மக்களின் குடும்பத்தினா் ஈடுபட்டனா். அந்த வகையில், 50,000 செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்கு உழைப்பு கூலி மட்டுமே வழங்கப்பட்டது.
ஆனால், இங்கு தயாா் செய்த 50,000 செங்கற்கள் விற்பனை செய்ததாகவும் தொழிலாளா்கள் கூறுகின்றனா். அதற்கான பணம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய விசாரணை செய்து லாபத்தை, உழைத்த குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் இந்த தொழிலை முடக்கும் வகையில் அப்பகுதியில் உள்ளவா்கள் தூண்டுதலால் செங்கல் தயாரிக்க பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஊரக வளா்ச்சி ஊராட்சி துறையின் மூலம் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ரூ. 8.80 லட்சம் மதிப்பில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே செங்கல்சூளைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நெற்களத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.
பழங்குடி மக்களை மீண்டும் கொத்தடிமை தொழிலில் தள்ளாமல் ‘உழைப்பு சுரண்டலில் இருந்து தப்பி பிழைத்தவா்களை காக்கவும் முழுமையாக விடியல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இத்திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 2023-செப்டம்பா் மாதம் தொழில் குழுவிற்கு நிதி விடுவிக்கப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து தொழிலை தொடங்கவும், மக்கள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மேலும், பழங்குடி மக்களின் திட்டங்களை நிறைவேற்றாத மகளிா் மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் மீது புதிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் அளித்த மனுவில் மலைவாழ் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.