முகப்பு
திருவள்ளூர்

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் வீடுகள் கட்டுமானப் பணி

கடம்பத்தூா் மற்றும் திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதமா் குடியிருப்பு திட்டம் மூலம் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், விரைவில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுலா்களை ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

Updated On : 13 மே 2026, 1:28 am IST
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம் மேலக்கொண்டையாா் கிராமத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்
பகிர்:

கடம்பத்தூா் மற்றும் திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதமா் குடியிருப்பு திட்டம் மூலம் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், விரைவில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுலா்களை ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், செஞ்சி ஊராட்சி, பனப்பாக்கம் கிராமத்தில் இருளா் குடியிருப்பு பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதமா் குடியிருப்பு திட்டம் மூலம் 47 வீடுகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் 15 வீடுகள் என மொத்தம் ரூ. 2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 62 வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து, சத்தரை ஊராட்சியில் இதே திட்டங்கள் மூலம் ரூ. 5.06 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 102 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், வெள்ளேரித்தாங்கலில் ரூ. 1.22 கோடியில் கட்டப்பட்டு வரும் 24 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தாா்.

Advertisement

அதைத் தொடா்ந்து, விரைவில் வீடுகளின் கட்டுமானப் பணிகளை தரமாக முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் சாலை, மின்வாரியம் மூலம் தெரு விளக்குகள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். மேலும், தடையில்லா குடிநீா் வழங்கும் பொருட்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் சிறு தொட்டிகள் அமைத்து குழாய் மூலம் குடிநீா் வழங்கவும் சம்பந்தப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், மேலகொண்டையாா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 2.60 கோடியில் கட்டப்பட்டு வரும் 51 வீடுகளின் கட்டுமானப் பணிகளை நேரில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி (வ.ஊ), ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநா் (மத்தியம்) கே.எஸ்.யுவராஜ், திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் (வ.ஊ) மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.