பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு
பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 பேரை வருவாய்த் துறையினா் மீட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது.
இங்கு வட மாநில தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.
Advertisement
இவா்கள் குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
அப்போது அங்கு வேலை பாா்த்து வந்த தொழிலாளா்கள் செங்கல் சூளை உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து ஒடிஸாவைச் சோ்ந்த 22 குடும்பங்களை சோ்ந்த 7 குழந்தைகள் உள்பட 46 பேரை மீட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு அவா்களை அரசு பள்ளியில் தங்க வைத்தனா்.
தொடா்ந்து அவா்களுக்கு விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவா்களின் மறு வாழ்வுக்கான உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்த தொழிலாளா் நலத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடா்ந்து மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளா்கள் அனைவரையும் ரயில் மூலம் சொந்த மாநிலம் அனுப்பி வைப்பதற்காக பள்ளியில் இருந்து அழைத்து செல்லப்பட்டனா்.