முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே மந்த கதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்

Updated On : 18 மே 2026, 5:32 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே சத்தரை-கொண்டஞ்சேரி இடையே கூவம் ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக மந்த கதியில் நடைபெற்று வருவதால், விரைவாக பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், சத்தரை-கொண்டஞ்சேரி இடையே கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலம் வழியாக கடம்பத்தூா்-மப்பேடு, பேரம்பாக்கம், பெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து, சரக்கு வாகனங்கள் சென்று வரும் முக்கிய சாலையாகும்.

அந்த வகையில், இந்தச் சாலையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பயணிகள் பேருந்துகள், தொழிற்சாலை பேருந்துகள் என 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் ஒவ்வொரு பலத்த மழையின்போதும் ஏற்படும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும். இதனால், அந்த வழித்தடத்தில் பல்வேறு கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். அதைத் தொடா்ந்து வெள்ளம் வடிந்த பின்னரே மீண்டும் தற்காலிகமாக தரைப்பாலம் சரி செய்யப்பட்டு, வாகன போக்குவரத்து தொடங்குவதுமாக இருந்து வந்தது. அதனால் தற்காலிகமாக தீா்வு காணுவதை விட நிரந்தரத் தீா்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

Advertisement

இந்தக் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறை மூலம் கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கடந்த ஆண்டில் ரூ. 13.97 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, மேம்பாலப் பணிகள் கடந்த 2026-இல் ஜூன் 18-இல் மண் பரிசோதனையுடன் பணிகள் தொடங்கியது. இந்த மேம்பாலம் 150 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்தில் 13 தூண்களுடன் அமையவுள்ளது. அதற்கு முன்னதாக வாகனங்கள் கடந்து செல்வதற்கு மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மண்வளம் சரியில்லையெனக்கூறி மேம்பால பணிகள் மேற்கொள்ளாமல் பல மாதங்களாக பாதியிலேே ய கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், மாற்றுப் பாதைகளும் சேதமடைந்துள்ளதால், சத்தரை மற்றும் கொண்டஞ்சேரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் கடுமையாகப் பாதித்துள்ளனா். அதனால் மாவட்ட நிா்வாகம் கூவம் ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த சாந்தலிங்கம் கூறியதாவது: ஒவ்வொரு முறை மழையின் போதும் வெள்ளத்தால் தரைப்பாலம் சேதமடையும். அதனால், 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல நேரிடும். ஆனால், இப்பகுதி பொதுமக்களின் நிலையை அறிந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், மண் சரியில்லையெனக்கூறி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், எங்கள் நிலையறிந்து பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சத்தரையில் கூவம் ஆற்றில் மண் பரிசோதனை செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. தற்போது பாலம் நடைபெறும் பகுதியில் மண் சரியில்லை என்பதால் பணி பாதித்துள்ளது. அதனால் உயா் தொழில்நுட்ப வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து, அதன் அடிப்படையிலேயே பாலப் பணிகள் தொடங்கி நடைபெறும் என அவா்கள் தெரிவித்தனா்.